திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. உற்சாகத்துடன் மாணவர்கள் தேர்வெழுதச் சென்றனர்.

Update: 2022-05-06 05:00 GMT

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத வந்த மாணவியர்களுக்கு வெற்றி திலகமிட்டு பள்ளி ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை முதல் துவங்கியது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு அறைக்கு தேர்வு எழுத வந்திருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. புதிய பாடப் புத்தகங்கள் தயாரித்த பின்னர் எழுதும் முதல் பொதுத் தேர்வு இது.  தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்கள், ஒரே தாளாக நடைபெறும் முதல் தேர்வும் இதுவே.  

இந்த நிலையில், நகராட்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 504 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் 17,318  மாணவர்களும்   16,075 மாணவிகளும் என 33,393 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.  மொத்தம் 139 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் 5 தனித் தேர்வு மையங்களில். 1171 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். 144 முதன்மைக் கம்பனி கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள் அறை கண்காணிப்பாளர்கள் எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க,  200 ஆசிரியர்கள் நிலையான பறக்கும் படையினராக செயல்பட உள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  411 மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் 340  மாணவியர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத போதுமான அளவு இயற்கை வசதியும், தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  தேர்வு அறைகள் போதுமான அளவு வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு மாணவர்களும் தேர்வு பணி மேற்கொள்ளும் அலுவலர்களும் உரிய நேரத்தில் வருகை புரியும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்வுக் காலங்களில் மின்தடை ஏற்படாமல் தடையற்ற மின்சாரம் வழங்க மின்சாரத்துறையினர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் தேர்வு மையங்களில் உரிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News