உடுமலை அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது; 1.78 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்

வனத்துறை அதிகாரி என்று பொய் கூறி, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கள்ள நோட்டு அச்சடித்தவர் உ்ள்ளிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். 1.78 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை போலீசார் கைபற்றினர்.

Update: 2023-01-20 08:22 GMT

போலீசார் கைபற்றிய கள்ளநோட்டு அச்சடித்த பிரிண்டர் இயந்திரம்.

கேரளாவை சேர்ந்தவர் கனி ராஜ் (வயது 46). இவர் மூணாறு பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தனது வங்கிக்கணக்கில் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த இயந்திரம் பணத்தை எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக பணத்தை இயந்திரத்தில் இருந்து வெளியே தள்ளியது. இதனால் கள்ள ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இதற்கிடையில் கள்ள ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் செலுத்தியது தொடர்பான தகவலை, அந்த இயந்திரம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தது. இதையடுத்து கள்ளரூபாய் நோட்டுகளை செலுத்த முயன்ற கனி ராஜை அவருடைய வங்கி கணக்கை வைத்து, அவரை பற்றிய விவரங்களை சேகரித்த போலீசார், அவரை கண்காணித்து திடீரென கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 500ரூபாய் கள்ளநோட்டுகள் 76ஐ பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த ராம்குமார், அழகர் மற்றும் புதுக்கோட்டை திருமயத்தை சேர்ந்த பழனிக்குமார், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்த ஹக்கீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த பிரபு (வயது 39) என்பவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொழுமம் பகுதியில் வசித்து வருவதாக கைதான ஹக்கீம் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து பிரபுவை கைது செய்ய, கேரள மாநிலம் மறையூர் போலீசார் ஹக்கீமை அழைத்துக்கொண்டு கொழுமம் வந்தனர். அப்போது அங்கு வீட்டில் இருந்த பிரபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 356 (ஒரு லட்சத்து 78 ஆயிரம்), ஒரு பிரிண்டர் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் வனத்துறை அதிகாரி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதுடன் அங்கு கள்ளநோட்டுக்களை தயாரித்து தனது கூட்டாளிகள் மூலம் புழக்கத்தில் விட்டுள்ளார். வனத்துறை அதிகாரி என்று கூறியதால், அவரது நடவடிக்கைகள், அவரை சந்திக்க வந்து போகும் நபர்கள் குறித்து அங்கிருந்த மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுவரை ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் எங்கெல்லாம் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளனர். இவர்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரபுவுக்கு வாடகைக்கு வீடு வழங்கிய கொழுமம் ஊராட்சி மன்ற செயலர் சங்கிலித்துரை என்பவரிடமும் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் கள்ளநோட்டு கும்பல் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. உடுமலை பகுதியில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News