திருச்சி அருகே காலி மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி அருகே காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-09-29 03:15 GMT

திருச்சி அருகே காலி மது பாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுபள்ளி பகுதியில் உள்ள பத்மா பாட்டில் கம்பெனியிலிருந்து ஒரு லாரியில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் பாட்டில் கம்பெனிக்கு 200 மூட்டைகளில் காலி மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லால்குடி வழியாக சென்னை சென்று கொண்டிருந்தனர்.

இந்த லாரியை திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சுந்தரமூர்த்தி (வயது 29) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சுந்தரமூர்த்தி மதுபோதையில் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே லால்குடி அருகே மேலவாளாடி ரயில்வே மேம் பாலத்தை கடந்ததும், லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்றது. அகிலாண்டபுரம் கிராமத்தை கடந்ததும் லாரியில் அடுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் திருச்சி- சிதம்பரம்  சரிந்து பாட்டில்கள் ரோட்டில் விழுந்ததில் ரோடு முழுவதும் கண்ணாடி பாட்டில்களாக நொறுங்கி கிடந்தது.

லாரி கவிழ்ந்ததால் சாலையில் பாட்டில்கள் நொறுங்கி கிடந்தன.

சற்று தூரத்தில் உள்ள முத்தமிழ்நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் மோதிய லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் ரோட்டோரம் நிறுத்தியிருந்த இரண்டு கார்களும் லாரியில் சிக்கி நொறுங்கின. லாரி கவிழ்ந்ததில் ரோட்டோரம் இருந்த மின்கம்பம் நொறுங்கி விழுந்ததில் தாளக்குடி, முத்தமிழ்நகர், வாழைக்கட்டை, அப்பாத்துரை, அகிலாண்டபுரம், கீரமங்கலம், முத்தமிழ்நகர் ஆகிய கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

ரோட்டின் நடுவே மதுபாட்டில்கள் நொறுங்கி கிடந்ததால் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமமாக இருந்தது. இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. அந்த பகுதி இளைஞர்கள் ரோட்டில் நொறுங்கி கிடந்த மதுபாட்டில்களை துடைப்பானால் கூட்டி அள்ளி அப்புறப்படுத்தியதும் போக்குவரத்து சீரானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News