திருவாரூர் நகர வீதிகளில் ஆடி அசைந்தாடுகிறது தியாகராஜர் கோவில் தேர்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று காலை 8.10 மணிக்கு துவங்கியது.

Update: 2022-03-15 05:42 GMT

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடந்து வருகிறது.

சைவத்தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித் தேரோட்டம் இன்று காலை 8.10மணிக்கு துவங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேரை வடம் பிடித்து துவங்கி வைத்தார்.தேர்திருவிழா பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுவது கூடுதல் சிறப்பு .

ஆழித்தேர் என்ற பெயருக்கு ஏற்றார் போல் இத்தேரானது 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேரோடும் வீதிகளில் சுகாதாரத் துறையின் சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு பணிக்காக 2000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து இறுதியாக மாலை 7 மணி அளவில் நிலை அடியை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் திருவாரூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது .

Tags:    

Similar News