திருவாரூர் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு

திருவாரூர் அருகே 2 கோடியே 90 லட்சம் சார்பில் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்

Update: 2022-03-20 12:13 GMT

திருவாரூர் அருகே சாலை வளைவு அகலப்படுத்தும் பணியை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

திருவாரூர் வட்டம் அரசவனங்காடு பகுதியில் திருவாரூர்-குடவாசல்-கும்பகோணம் சாலை ஓடுதளம் மேம்பாடு செய்யும் பணி ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும், ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை வளைவு அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு பணிகளின் தரத்தினையும், சாலை விரிவாக்க பணிகளில் சாலை அகலம், உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் எவவேலு செய்தியாளர்களிடம் கூறும்போது

திருவாரூர் மாவட்டத்தில் 328.04 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள்,230.050 கி.மீ மாவட்ட முக்கிய சாலைகள், 697.910 கி.மீ மாவட்ட இதர சாலைகள் மற்றும் 39.367 கி.மீ கரும்பு அபிவிருத்தி திட்டச்சாலைகள் என மொத்தம் 1295.367 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

2021-2022 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின்கீழ் ரூ.128 கோடி மதிப்பில் 4.20 கி.மீ நீள சாலைகள் இருவழித்தடத்திலிருந்து கடின புருவத்துடன் கூடிய இருவழித்தடமாவும்,7.60 கி.மீ நீள சாலைகள் இடைவழித்திலிருந்து இருவழித்தடமாகவும், 23.30 கி.மீ நீள சாலைகள் ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாகவும் அகலப்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை, திருவாரூர் புறவழிச்சாலை, மன்னார்குடி சுற்றுச்சாலை, வலங்கைமான் புறவழிச்சாலை, கூத்தாநல்லூர் புறவழிச்சாலை, திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பகுதி-2, நன்னிலம் புறவழிச்சாலை என மொத்தம் 7 புறவழிச்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு,அதன் முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டி நகருக்கும் புறவழிச்சாலை அமைக்கும் பணியில் வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி சாலை, திருத்துறைப்பூண்டி –மயிலாடுதுறை சாலை என 2.460 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.22.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது. மீதமுள்ள 6 புறவழிச்சாலைகள் பணிகளும் விரைவில் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சரின் ஆணைகிணங்க கிராமபுற சாலைகளை மேம்படுத்துதல்,பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் 59.94 கோடி மதிப்பீட்டில் 19 பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, 14 பாலங்கள் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கிராம சாலைகள் மேம்படுத்துதல்,பாலங்கள் கட்டுதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது.விபத்தில்லா சாலைகள் அமைக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்றார்.

முன்னதாக அரசவனங்காடு பகுதியில் சாலையோர மரக்கன்று நடும் பணியினை  அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News