திருவாரூரில் காசி விஸ்வநாதர் கோயில் மஹாகும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

திருவாரூரில் இன்று காலை நடைபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   

Update: 2021-11-24 06:01 GMT

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கேக்கரை பகுதியில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு விஸ்வநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கேக்கரை பகுதியில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு விஸ்வநாதர் சுவாமி கோயில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயில்  ராமர் பாதம் பட்ட இடமாகவும் காசிக்கே வீசம் என்ற ஐதீகத்தையும் கொண்டுள்ள கோயிலாகும். இந்நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி உபயதாரர்கள் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற்ற நிலையில் இன்று காலை 9.30  மணி அளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த 22ந் தேதி முதல் ஐயப்பன் சிவாச்சாரியார் தலைமையில் முதல் கால யாகசாலை பூஜை துவங்கி இன்று காலை வரையில் 4ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மகா பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் கடஙகள் புறப்பாடு நடைபெற்று  விசுவநாதர், விசாலாட்சி அம்மன் உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் சிவாச்சாரியார்கள் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

 இதில் பழனி ஆண்டவர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், திருவாரூர் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், டாக்டர் லட்சுமி நாராயணன் மற்றும் உபயதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசோக் குமார், தக்கார் ஜெயபால், தலைமை கணக்கர் சிவபுண்ணியம் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News