திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 680 வழக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 680 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-01-10 07:42 GMT

திருவாரூர் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்ட் விஜயகுமார்.

கொரோனா (ஒமிக்ரான் ) பரவலை முற்றிலும் தடுக்கவும்,பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட எல்லைகளில் 30 சோதனைச் சாவடிகள் 40 நிலையான ரோந்துகள், 34 இருசக்கர வாகன ரோந்துகள், 5 நெடுஞ்சாலை ரோந்துகள் அமைத்து மாவட்டம் முழுவதும் தொடர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் சுமார் 600 காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் அரசின் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் தன் குடும்பத்தின்மீது அக்கறையில்லாமல் முக்கவசம் அணியாமல் காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்த 147 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து இனிவரும் ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவை மீறி வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

Tags:    

Similar News