ஓ.பி.எஸ்.சின் சரிவுக்கு டாப் 10 காரணங்கள் பற்றி அ.தி.மு.க. தொண்டர்

ஓ.பி.எஸ்.சின் சரிவுக்கு டாப் 10 காரணங்கள் பற்றி அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்.

Update: 2022-06-21 09:48 GMT

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குரல் பொதுக்குழு கூடும் முன்பே அடங்கி விட்டது. இ.பி.எஸ்., பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட அதிகரித்து வரும் ஆதரவே இதற்கு காரணம். இந்நிலையில் தற்போதைய நிலையில் ஓ.பி.எஸ்., பொதுக்குழுவிற்கு வருவாரா? மாட்டாரா? என்ற விவாதம் சூடுபிடிக்கத்தொடங்கி உள்ளது. அந்த அளவு பொதுக்குழு கூடும் முன்னரே ஓ.பி.எஸ்.,சின் செல்வாக்கு கட்சியில் அதலபாதாளத்திற்கு சரிந்து விட்டது.

இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட புரட்சித்தலைவர் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் (உத்தரமேரூர் நகர வங்கி தலைவர்) எம்.கே.பி.வேலு தெளிவாக வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:-

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கருணாநிதி தான் அ.தி.மு.க.,வின் எதிரணி தலைவர் என்றே தொண்டர்களுக்கு அடையாளபடுத்தி சென்றுள்ள நிலையில் தன் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் என்றும் தானும் கருணாநிதியின் வசனங்களை படித்து வளர்ந்தவன் என்றும் சட்டசபையிலேயே ஓ.பி.எஸ். பேசியதை அ.தி.மு.க. தொண்டர்கள் ரசிக்கவில்லை .

2. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களே தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காக முதல்வரையோ , அமைச்சர்களையோ சந்திக்காத பொழுது இவர் மகன் வலிந்து சென்று முதல்வரை சந்தித்து தி.மு.க. ஆட்சியை பாராட்டியதை எந்த அ.தி.மு.க. தொண்டனும் ரசிக்கவில்லை .

3. ஒரு மாபெரும் கட்சியின் ஒற்றை பிரதிநிதியாய் மக்களவையில் இருக்கும் இவர் மகன் தன் லெட்டர் பேடில் மோடியின் படத்தை போட்டு இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பவில்லை.

4. அ.தி.மு.க.வை விட்டு சசிகலாவை நீக்க முழு காரணமாக இருந்த இவரின் இரண்டாவது மகன் சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதை அ.தி.மு.க. தொண்டர்கள் அறவே விரும்பவில்லை .

5.தி.மு.க.வை விட அ.தி.மு..கவை தமிழக மக்கள் அதிகம் விரும்புவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணம் அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை என்பது தான் , ஆனால் தன் மகனை எம் பி ஆக்கி , தன் தம்பியை ஆவின் தலைவராக்கி , தன் சம்பந்தியை அரசு வழக்கறிஞர் ஆக்கி அ.தி.மு.க.வின் தனிதன்மையை ஓ.பி.எஸ்., அழித்ததை அ.தி.மு.க. தொண்டர்கள் ரசிக்கவில்லை .

6. ஜெ., மறைவிற்கு பிறகு சசிகலாவை கழக பொதுச்செயலாளர் ஆக்கியதோடு , முதல்வராகவும் இவரே முன்மொழிந்து விட்டு அதன் பிறகு என்ன காரணத்திற்காக தர்மயுத்தம் தொடங்கினார் என்பதின் உண்மையான காரணங்களை மிக தாமதமாக உணர்ந்த தொண்டர்கள் இவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் .

7. தர்மயுத்த நேரத்தில் இவரை நம்பி தமிழகம் முழுக்க தொண்டர்கள் வீதியில் நின்ற பொழுது இவர் எந்த குடும்பத்தின் பிடியில் கட்சி போக கூடாது என தர்மயுத்தம் நடத்திகொண்டு இருந்தாரோ , அந்த குடும்பத்தை சேர்ந்த டி. டி. வி. தினகரனை ரகசியமாக சந்தித்து டீல் பேசியது தெரிந்த உடன் ஒட்டு மொத்த தொண்டர்களும் இதயம் நொறுங்கி போனார்கள் .

8. தர்ம யுத்தத்திற்கு பிறகு கட்சியில் இணைந்த இவர் துணை முதல்வர் , நிதி , வீட்டுவசதி என முக்கியத்துறைகளை பெறுவதில் காட்டிய ஆர்வத்தை தன்னை தம்பி வந்து ஜெயலலிதாவால் கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, இவருக்க அந்த பதவியை இழந்த பாண்டியராஜனை பற்றி எந்த கவலையும் படவில்லை , மேலும் தமிழகம் முழுக்க தனக்காக வந்த எவருக்கும் எதையும் செய்ய இவர் நினைக்கவில்லை , அதைவிட கொடுமை இன்றுவரை தர்மயுத்த கோஷ்டி என கூறி தமிழகம் முழுக்க ஒதுக்கப்படும் பிரச்சினைக்கு கழகத்தின் தலைமை பதவியில் இருந்து கொண்டு எந்த தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்பதால் தான் , அவரை ஆதரித்தவர்களே இன்று நிராகரிக்கிறார்கள் .

9. ஜெ., மரணம் குறித்து அன்று அனைத்து சந்தேகத்தையும் பொது வெளியில் கிளப்பியது இவர் தான் , மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க ஆணையம் கேட்டதும் இவர் தான் , அம்மாவை அடித்தே கொன்றார்கள் என்று பேசியதும் இவரின் தர்மயுத்த தளபதிகள் தான் , ஆனால் ஆட்சி முடியும் வரை ஆணையத்தில் ஆஜர் ஆகாமல் இருந்து விட்டு , இப்பொழுது அப்படியே அந்தர் பல்ட்டி அடித்தது தான் இவரை தொண்டர்கள் மட்டும் இன்றி தமிழக மக்களே வெறுக்க காரணமாக அமைந்து விட்டது .

10. எல்லாவற்றிற்கும் மேலாக சசிகலா விஷயத்தில் இவர் ஆடும் கண்ணாமூச்சி கண்றாவியை அவர் சார்ந்த  சமூக தொண்டர்களே ரசிக்கவில்லை , எப்பொழுதெல்லாம் தனக்கு பரபரப்பு தேவைபடுகிறதோ அப்பொழுதெல்லாம் சசிகலா விஷயத்தை பயன்படுத்தி கொள்ள நினைத்தாரே தவிர  ஒருபோதும் அவரை கட்சிக்குள் கொண்டு வர இவர் விரும்பவில்லை என்பதை எல்லோருமே தெரிந்து கொண்டார்கள் . மொத்தத்தில் சுயநல அரசியல் செய்வதிலும், குடும்ப அரசியல் செய்வதிலும் தி.மு.க.வை விஞ்சி நிற்கிறார் இந்த கருணாநிதியின் வசனத்தை படித்து வளர்ந்த பன்னீர் ! இப்படிக்கு

- அவலம் கண்டு ஆத்திரம் கொள்ளும் அன்னையின் பிள்ளை,.

கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன்... என தனது அறிக்கையினை முடித்துள்ளார்.

Tags:    

Similar News