பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
பணி நிரவல் நிரவல் கலந்தாய்வை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.;
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TESTF ) பொதுச்செயலாளரும், AIPTF இணைப் பொதுச்செயலாளரும், WTTC பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தொடக்கக்கல்வி இயக்குநரின் 23.04.2024 தேதியுற்ற செயல்முறை கடிதத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பணி நிரவல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு 1.8.2023 தேதி கணக்கீட்டின்படி ஆசிரியருடன் கூடிய உபரி பணியிடமாக கருதப்பட்ட 2236 பணியிடங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு 30.04.2024 வரையிலான மாணவர் சேர்க்கை அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு முன்னரே மார்ச் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயாரிப்பு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கிடையில் தீவிரமாக சேர்க்கை பேரணி, சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்டவைகள் மூலம் மாணவர் சேர்க்கையை வெகுவாக அதிகப்படுத்தி உள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதற்கு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுடைய பெரும் பங்கு உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இடைவிடாது தொடர்ந்தும் மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்புடன் நடைபெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் மாணவர் சேர்க்கையில் தற்காலிக தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அதற்குக் காரணமான ஆசிரியர்களை பாராட்டப்பட வேண்டியதற்கு மாறாக 30.04.2024 தேதியிலேயே கணக்கிட்டு பணி நிரவல் செய்வோம் என்று தெரிவித்திருப்பது ஆசிரியர்களை மனசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு பணி நிரவல் கைவிடப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பணி நிரவல்கள் காரணமாக கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் எண்ணிக்கையை பார்த்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர். பள்ளிகளில் இடம் பெற்றிருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கையினை மேலும் அதிகரிக்கும் வகையில், வரும் ஆண்டு பணி நிரவல் கிடையாது என்று தொடக்கக் கல்வித்துறை அறிவிக்க வேண்டும். ஆசிரியர்களும் தங்களது பள்ளிகளின் எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகளை முழுவதுமாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகளையும், எதிர்கால கல்வி நலனுக்கான முன்னுரிமைகளையும் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணங்களை நேர்மறை உணர்வுகளோடு ஆய்வு செய்து, பெற்றோர்கள் எதிர்பார்க்கும் வசதிகளான சுகாதாரவசதி, கழிப்பிடவசதி, காற்றோட்டமான வகுப்பறை, குடிநீர்வசதி, நுண்திறன் வகுப்பறைகள், ஆகியவற்றை பள்ளிகளில் மேம்படுத்தியுள்ள நேரத்தில் மாணவர் சேர்க்கை நிச்சயாக அதிகமாகும்.
தொடர்ந்து தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி வரை தொடர்வதால்,பணிநிரவலை கைவிட்டுஅரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, கல்விபுரட்சிக்கும் வித்திட்டு,ஏழை, எளிய மக்களின் கனவுகளை நனவாக்க தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல் வாய்ப்பாக அரசுப் பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டு பணி நிரவல் இல்லை என்ற அறிவிப்பை தொடக்கக்கல்வித் துறை வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி நடைபெறும் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அரசு வழங்கும் நிதியினை, அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தி பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.