ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதை ஒட்டி, தேனி மாவட்டத்தில் 830மையங்களில் 1,02,000குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-29 17:54 GMT

 நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி,  ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 830 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1,02,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், பேருந்து நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாம் நடைபெறுவதற்காக பொது சுகாதாரம், மருத்துவம், ஊட்டச்சத்து துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 3312 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முகாம் நடைபெறுவதை மேற்பார்வையிடுவதற்காக வட்டார அளவில் 104 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 14 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மலைவாழ் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 12 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகர்புற பகுதிகளில் அமைந்துள்ள குடிசை பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே வருகிற ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு தங்களின் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறவும், இனிவரும் காலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோய் இல்லாத சமுதாயம் ஏற்படுத்தவும் பொதுமக்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News