விஜயதசமி : தஞ்சையில் பள்ளிகளில் குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்த பெற்றோர்

இந்த ஆண்டு மழலையர்- நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்ததால் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்

Update: 2021-10-15 07:30 GMT

விஜயதசமியை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை

விஜயதசமி முன்னிட்டு தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  பெற்றோர்கள் ஆர்வத்துடன் குழந்தைகளை சேர்த்தனர்.

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளன்று தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் நன்கு படித்து மேல் நிலைக்கு வருவார்கள் என ஐதீகம். அதனால், விடுமுறை தினமாக இருந்தபோதிலும் வெள்ளிக்கிழமை  அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள்  சேர்க்கை நடைபெற்றது.

தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று தங்கள் குழந்தைகளின் முதல் படிப்பை  தொடங்கும் விதமாக பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து, கீழே கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லில் தமிழ் எழுத்தின் முதலெழுத்து அ என்ற எழுத்தை எழுதி குழந்தைகளை படிப்பை தொடங்கினர். மேலும் குழந்தைகள் நன்கு பேச வேண்டும், நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக நாக்கில் தேன் வைத்து அவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் பணியை  ஆசிரியர்கள் தொடங்கினர்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வமில்லாத பெற்றோர்கள், இந்த ஆண்டு மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் இயங்கலாம் என அரசு அறிவிக்கப்பட்டதால்  ஆர்வமுடன் வந்து தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News