தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.

Update: 2022-04-27 13:30 GMT

தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான இடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் தேரில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடமான களிமேடு கிராமத்தில் தேர் எரிந்த இடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்   அமைச்சர்கள் கே. என். நேரு,  அன்பில்  மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, பழனிமாணிக்கம், மின்துறை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரசு உயர் அலுவலர்கள் சென்று இருந்தனர்.

முன்னதாக  முதல்வர் மு.க. ஸ்டாலின் களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் இந்த விபத்து குறித்து தகுந்த காரணங்களை கண்டறியவும் வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அதை ஆய்வு செய்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ். அவர்களை விசாரிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரசியலாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர் அதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை இதில் அரசியல் பார்க்கக் கூடாது என்பதுதான் தனது எண்ணம் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News