கட்டணம் செலுத்த வில்லை என்பதால் ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை -பெற்றோர்கள் வேதனை

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் தனது இரண்டு பிள்ளைகளையும் ஆன்-லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை என தந்தை புகார்.

Update: 2021-06-24 12:24 GMT

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது இரண்டு மகள்கள் ஸ்ரீதைலா ஐந்தாம் வகுப்பும், இளைய மகள் ஸ்ரீதெய்வானை ஒன்றாம் வகுப்பும் நெடுவாக்கோட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் இந்தாண்டிற்கான ஆன்-லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில்,கார்த்திகேயனின் இரண்டு குழந்தைகளையும் ஆன்-லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட பள்ளி தாளாரிடம் நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு உங்கள் இரண்டு குழந்தைகளின் கட்டணத்தை, அதாவது ஸ்ரீதைலாவிற்கு கடந்தாண்டு கட்டணம் 48,100 மற்றும் இந்தாண்டு கட்டணம் 72,520 ரூபாயும், இளைய மகள் தெய்வாணைக்கு 58,820 ரூபாய் உடனடியாக ஒரே தவனையாக கட்ட வேண்டும், இல்லையென்றால் ஆன்-லைன் வகுப்பிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறப்பட்டதாக கார்த்திகேயன் கூறுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவால் கடந்தாண்டும், இந்தாண்டும் உரிய வருமான இன்றி தவித்து வருகிறோம். கடந்தாண்டு ஒரு நாள் கூட பள்ளிகூடம் இயங்கவில்லை, இந்தாண்டும் நடைபெறுமா என்று தெரியவில்லை, ஆன்-லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது, ஆனாலும் தனியார் பள்ளியில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், வழங்கப்படாத புத்தகம், வாகன கட்டணம், சாப்பாடு கட்டணம் என அனைத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அதற்கும் உரிய ரசீது வழங்கவது இல்லை, ஒரு வெள்ளை பேப்பரில் தொகையை எழுதி பள்ளி கூட சீல் வைத்து தருகின்றனர். இருந்தும் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கக்கூடாது என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருகிறோம். இந்நிலையில் இந்தாண்டிற்கான கட்டனத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே ஆன்-லைன் வகுப்பில் குழந்தைகளை அனுமதிப்போம் என பள்ளி நிர்வாக கூறுவதாக அவர் தெரிவிக்கின்றார். இது குறித்து கார்த்திகேயன் முதலமைச்சர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர், CEO விற்கு பதிவு அஞ்சல் மூலம் புகார் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் நேரிடையாக சென்று விளக்கம் கேட்ட போது, இது முற்றிலும் தவறான தகவல் என்றும், இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களின் பெற்றோர்கள் ஒருவர் கூட புகார் தெரிவிக்கவில்லை, மேலும் கட்டணம் செலுத்துவதற்கு உரிய கால அவகாசமும் நாங்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News