சிறைச்சாலை இடத்தில் கட்டியுள்ள கட்டங்களை அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கு நோட்டீஸ்

திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது

Update: 2022-02-25 15:15 GMT

திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை 4 வாரங்களுக்குள் அகற்றுமாறு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருமலைசமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் தமிழக அரசின் திறந்தவெளிச் சிறைக்கு சொந்தமான நிலத்தில், 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த 2018 அக்டோபர் 3ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்தது. அப்போதைய வட்டாட்சியர் அருணகிரி பல்கலைக்கழகத்திற்கு சென்று அளவிடும் பணியை தொடங்கினர்.

பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என மனு அளித்தனர். அந்த மனு மீதான விளக்கத்தை அளிக்க அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. மூன்றாண்டுகளில் அக்குழு எந்த ஒரு விசாரணையும் நடத்தாத நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு அந்தக் குழுவை கலைத்துவிட்டு தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி  தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இக்குழுவினர் கடந்த 22.10.21 அன்று தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு இடங்களை நான்கு வாரங்களுக்குள் அகற்றி (24.03.2022) அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நோட்டீஸ் தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News