ஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் 9 பேர் கைது

தஞ்சையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-26 11:15 GMT

ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி என்ற போர்வையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது, வேதாந்தா நிறுவனத்துக்கு துணை போகும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் தஞ்சாவூரில் போலீஸாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.

மக்கள் அதிகாரத்தின் தஞ்சை மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமை வகித்தார். இதில் பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், "கடந்த ஸ்டெர்லைட் போராட்டங்களின் போது, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட தீமைகளை எதிர்த்துப் போராடி மக்கள் மீது தமிழக அரசு பேசித் தீர்ப்பதற்கு பதில் துப்பாக்கிச்சூடு நடத்த 15 பேரை பலி கொண்டது. இன்றுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை," என்றார்.

"தற்போது கொரோனாவை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக் குறையைப் போக்க ஆக்சிஜன் தயாரிக்கிறோம் என்ற பெயரில் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் துணை போகக்கூடாது. ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் மக்களின் விருப்பம்," என்றார் காளியப்பன்.

இவ் ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநகர செயலாளர் இராவணன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், ஆர்எம்பிஐ மாவட்டச் செயலாளர் மதியழகன், தஞ்சை கலைக்குழு சாம்பான், ஆதி தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், சமூக ஆர்வலர் ஜெயபால், தவத்திரு 'விசிறி சாமியார்' முருகன், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் பாபு, அருள், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் வெ. சேவையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர்; முறையாக விண்ணப்பித்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் போலீஸார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இந்நிலையில், போலீஸாரின் தடையை மீறி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து இதில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News