பயன்பாட்டிற்கு வரும் முன்னே சேதமடைந்த புதிய சாலைகள்: விசாரணை நடத்த வலியுறுத்தல்

வல்லுநர் குழு அமைத்து, 165 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் தரத்தை பரிசோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்

Update: 2021-11-25 04:00 GMT

தஞ்சை மாவட்டத்தில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே உள்வாங்கிய சாலைகள்

பயன்பாட்டுக்கு வரும் முன்பே, 3,517 கோடியில் போடப்பட்ட சாலைகள் உள்வாங்கியது. சாலைகளை ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை – விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த 2010–ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு தஞ்சை– விக்கிரவாண்டி இடையே புதிதாக சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017–ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.3,517 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகளில் கெடிலம், தென்பெண்ணை உள்பட 26 ஆற்று பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள், 3 ரெயில்வே மேம்பாலங்கள், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், 2–வது பிரிவில், சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகளில் 34 ஆற்று பாலங்களும் ஜெயங்கொண்டம், கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி உள்ளிட்ட 23 இடங்களில் மேம்பாலங்கள், ஒரு சுங்கச்சாவடிகளும், .3–வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகளில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 62 இடங்களில் ஆற்று பாலங்கள், தாராசுரத்தில் ரெயில்வே மேம்பாலம், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்களும் அடங்கும். தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளாதால் அடுத்தாண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டை அருகே செல்லும் நான்கு வழிச்சாலையில் தொடர் மழை காரணமாக சுமார் ஒரு அடிக்கு மேல் உள்வாங்கியுள்ளது, இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுமார் 3,500 கோடி ரூபாயில் போடப்பட்ட சாலையில், இதுவரை ஒரு இரு சக்கர வாகனம் கூட செல்லாத நிலையில், உள்வாங்கி இருப்பது என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், வாகனங்கள் செல்லாத போதே சாலை உள்வாங்குகிறது, பயன்பாட்டிற்கு வந்த பிறகு வாகனங்கள் வேகமாக செல்லும்போது, சாலைகள் உள்வாங்கினால் மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்படும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால், அரசு பேருந்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சாலைகள் பயன்பாட்டிற்கு வந்து, மிகப் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு சாலை தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், மேலும் சாலைகளில் தற்காலிக தீர்வு ஏற்படுத்தாமல், நிரத்தர தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும். வல்லுநர் குழு அமைத்து, 165 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளின் தரத்தை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், ஒருவேளை சாலை தரமற்றதாக இருந்தால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News