கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாலை: புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

Update: 2022-01-15 16:15 GMT

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்கமாலை.

கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவர் சஞ்சய்காந்தி தெரிவித்தார் 

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடுக்காக அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற "கும்பகோணம் வெற்றிலை"க்கு புவிசார் குறியீடு கேட்டு அதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி படுகையில் முக்கியமாக திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்களில் பாக்குவெட்டிகள் கிடைத்துள்ளது. இவை மத்திய காலத்தை சேர்ந்தவை (கிபி.10-முதல் 14 ம் நூற்றாண்டு) இக்காலத்து முதலே காவிரி படுக்கையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை இந்த அகழ்வாராய்ச்சி உறுதி செய்துகிறது.

எனவே தான் பல நூறாண்டுகளை கடந்து, காவிரி டெல்டாவை அடக்கியுள்ள மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது.  தஞ்சாவூர் மாவட்ட அரசிதழில் கி.பி.1883 ம் ஆண்டு திவான்பகதூர் வெங்கடசாமி ராவ் என்பவர் இந்த கும்பகோணம் வெற்றிலையைப் பற்றியும், அதன்பிறகு கி.பி.2000, 2002ம் ஆண்டுகளில் அரசு நாளிதழ் மறுபதிப்பில் இந்த கும்பகோணம் வெற்றிலையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை அமைப்பு தன்மையில் மாறுபட்டிருக்கிறது. காவிரி படுகை நீர், மண் வளம், உழவர்களின் நுணுக்கமான உழைப்பு, தக்க சமயத்தில் பயிரிடும் முறை, பாரம்பரிய அறிவினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறை தான் இதனை வசப்படுத்தி தனது தனிசிறப்பை காட்டுகிறது.

அதேபோல் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை என்ற ஊர் உள்ளது. சங்கமிக்கும் இக்கடல் காற்றினால் இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்து காட்டுகிறது. தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்படும், பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகளவில் உள்ளது. தோவாளையின் தெற்கே காற்றாடி மலை, வடக்கே தாடக மலை ஆகிய இரு குன்றுகளுக்கு இடையே இந்த ஊர் உள்ளதால், இந்த ஊருக்கான இயற்கையான தட்பவெட்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை பூக்கள் விளைவிப்பதற்கும், பூக்கைளை பின்னுவதற்கும் சரியான சூழல் அமைந்துள்ளது. இந்த சூழலை இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் சரியாக பயன்படுத்தி தோவாளை மாணிக்கமாலையை உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த பூவை பார்ப்பதற்கு பட்டையாக பாய் விரித்தார்போல் இருக்கும். வெள்ளை அரளி, சிவப்பு அரளிப்பூ. இங்கு விளைகின்ற காட்சி கோலம் காண்போரை வியக்க வைக்கிறது. இந்த வெள்ளை அரளிப்பூவையும், சிவப்பு அரளிப்பூவையும் பறித்து சம அளவில் கட்டுகிறபோது அது மாணிக்கம் போன்று தோற்றமளிக்கும். அதனால் தான் இதற்கு மாணிக்கமாலை என பெயர் பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இரு பொருள்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் உலகளவில் அது ஏற்றமதி செய்யப்படும். இதனால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பயன்அடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News