தஞ்சையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பூக்கள் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-02 15:00 GMT

தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூச்சந்தைக்கு தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பூக்கள் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது. மேலும் மழையினால் பூக்கள் வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் குறைந்த அளவே வந்திருந்தனர்.

நேற்று தஞ்சை மார்க்கெட்டில் பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று தஞ்சை பூச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை (கிலோ கணக்கில்) வருமாறு:-

மல்லிகை ரூ.2000, முல்லை ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1,200, காட்டு மல்லி ரூ.800, ரோஜா ரூ.200, அரளி ரூ.300, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டிப்பூ ரூ.60, மருக்கொழுந்து ரூ.200.

பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும், பண்டிகை காலங்களில் விற்பனை அதிக அளவில் நடைபெறும். ஆனால் நேற்று மழை பெய்ததால் பூ விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் கொள்முதல் செய்த பூக்களை என்ன செய்வது என்று தெரியாமல் வியாபாரிகள் திகைத்தனர். இதனால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பூ மொத்த வியாபாரி சந்திரசேகர் கூறுகையில், "தஞ்சை மார்க்கெட்டுக்கு தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து தான் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் மழை காரணமாக பூ விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகையின் போதும் மழை கொட்டியது. இதனால் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டியும் மழை பெய்ததால் பூ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் பூக்களை தேக்கி வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்" என்றார்.

Tags:    

Similar News