தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம்

தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-04-03 05:21 GMT

தஞ்சாவூரில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் தேரோடும் வீதிகளான தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழ ராஜவீதி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது.

இதில் கீழராஜ வீதியில் மட்டும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மற்ற 3 வீதிகளிலும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக புதிய தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் பெரும்பாலும் இரவு நேரங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே போடப்பட்ட பழைய சாலைகள் பெயர்த்து புதிய தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.

மேலும் கழிவுநீர் வாய்க்கால் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு உள்ளது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். வரும் 13-ந் தேதி பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடப்பதால் இன்னும் நான்கு நாட்களுக்குள் சாலை பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News