கழிவு நீரால் மாசடையும் வெண்ணாற்றின் கிளை நதியான வடவாறு

காவிரி கிளை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், விளைநிலங்கள் பாதிக்கும். எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

Update: 2021-06-10 03:15 GMT

கழிவு நீரால் மாசடையும் வெண்ணாற்றின் கிளை நதியான வடவாறு

குறுவை சாகுபடிக்கு ஜீன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், காவிரி கிளை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் அருகே வெண்ணாறில் கிளை நதியாக வடவாறு பிரிந்து, திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஏரிக்கு சென்று பின்னர் கடலில் கலக்கிறது.

இந்த வடவாறை நம்பி 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஐம்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் வடுவூர் ஏரியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்திற்கு நீர் ஆதாரமாகவும் உள்ள இந்த வடவாறு தற்போது கழிவுகளால் மாசுப்பட்டு சாக்கடை காட்சியளிக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடவாற்றை நம்பி மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், பூண்டி, அம்மாபேட்டை, சடையார்கோவில், வடுவூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பறவைகளின் சரணாலயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆறு தற்போது சென்னை கூவம் நதி போல் மாசுப்பட்டு, விளைநிலங்களை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. இதில் தண்ணீர் திறந்தால் இதில் உள்ள கழிவுகள், பாட்டில்கள் அனைத்தும் விளை நிலங்களுக்குள் சென்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம், பறவைகளுக்கு தீங்கும் ஏற்படுத்தும். எனவே இந்த ஆற்றில் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கழிவுநீர், கல்லூரியின் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதால் இதனை முழுமையாக தூர்வாரி மீண்டும் கழிவு நீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News