விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்கங்களுக்கிடையே வாக்குவாதம்

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் போராடிய விவசாயிகளுக்கு கண்டனம்

Update: 2021-09-24 07:15 GMT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தஞ்சையில் விவசாய குறைதீர் கூட்டத்தில், விவசாய சங்கங்களுக்குள் சச்சரவும் ஆட்சியருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இமாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர்  தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல்  இருந்த கூட்டம் இன்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெறவுள்ள சம்பா சாகுபடி குறித்து விவசாயிகளின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதூர் பகுதியில் விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாய பாதையை, சில தனிநபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அது தொடர்பாக  பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், ஆட்சியரை பார்த்து குறைகளை தீர்க்காத இந்த கூட்டத்தை நடத்தி என்ன பயன்.  விளம்பரத்திற்காக புகைப்படம் எடுத்துக்கொள்வதாகவும்  விமர்சனம் செய்தனர். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட  மாவட்ட ஆட்சியர்  வருவாய் கோட்டாட்சியரிடம் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

எனினும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்த ஜூன் மாதம் தங்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டினார். அப்போது பொறுமையாக பதில் அளித்து ஆட்சியர் நான் ஜூலை மாதம் தான் பதவியேற்றேன். ஆனால், என்னிடம் ஜூன் மாதம் மனு அளித்ததாக தெரிவிக்கிறீர்கள், ஆனாலும் பரவாயில்லை, இப்போது தீர்வு தான் முக்கியம்.   சம்பவ இடத்திற்கு உங்களுடன் வருவாய் கோட்டாட்சியரை  அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.

ஆனால், விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த மற்ற விவசாய சங்க பிரதிநிதிகள்,  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் போது, மீண்டும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல எனவும் அறிவுறுத்தினர்.  இதனால், விவசாயிகள் குறைதீர்  கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News