தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

குடிநீர் தொட்டியில் மனித கழிவை கொட்டிய சாதி வெறியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-20 04:18 GMT

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித கழிவை கொட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, குடிநீர் தொட்டியில் மனித கழிவை கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் பினாமி பேரில் போலி இட ஒதுக்கீடு மூலம் விலை நிலத்தை அளித்து பெட்ரோல் பங்க் அமையும் முயலும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி நாடாளுமன்றச் செயலாளர் வர்கீஸ், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News