தென்காசி அருகே கோவில் நிர்வாக பிரச்சினையில் தொழிலதிபர் மீது தாக்குதல்

தென்காசி அருகே கோவில் நிர்வாக பிரச்சினையில் தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

Update: 2024-05-02 07:34 GMT

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன்

கோயில் நிர்வாக பிரச்சினை காரணமாக தொழிலதிபரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகிகள் மீதுநடவடிக்கை எடுக்க  காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் மதுரையில் சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்று நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான சாம்பவர்வடகரை பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியான சங்கர்ராமன் என்பவருக்கும் இடையே நிலவி வந்த கோவில் நிர்வாக பிரச்சனை காரணமாக சங்கர்ராமனும் அவரது கூட்டாளிகளான கருப்பசாமி, சிவன், அண்ணாமலை, சரவணன், சுரேஷ் ஆகியோர்கள் சேர்ந்து சரவணனை கடந்த 28 -ம் தேதி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், படுகாயம் அடைந்த சரவணன் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சரவணனின் சகோதரர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் கொடுத்திருந்தார்.

ஆனால், சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் மேல் ஆகியும் சரவணன் தாக்கப்பட்டது தொடர்பாக சாம்பவர்வடகரை போலீசார் எந்த விதமான வழக்குப்பதிவும் செய்யாத நிலையில், திமுக பிரமுகர்கள் என்பதால் காவல்துறையினர் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக சரவணன் தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இதுவரை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கூட விசாரணை நடத்தாத நிலையில், முன்னதாகவே சங்கர்ராமன் மீது எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் ஆகவே,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News