தெரு நாய்களுக்கு நாளை முதல் தடுப்பூசி - தென்காசி நகராட்சி அறிவிப்பு

Update: 2022-10-04 12:29 GMT

பைல் படம்.

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு நாளை முதல் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி போடப்படும் என தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தெரிவிக்கையில், தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது . இந்த 33 வார்டு  பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது.

அதனை தடுக்கும் வண்ணம் நகர் மன்றத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளையும் ஏற்று நகர் மன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெருநாய்களை பிடிக்கவும், கருத்தடை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.

நகர்மன்ற தீர்மானத்தின் படியும், நாளை புதன்கிழமை (5/10/2022) முதல் ஒப்பந்ததாரரால் தெரு நாய்கள் பிடிக்கப்படும். அதன்பின்பு மருத்துவரால் தென்காசி நகராட்சிக்கு சொந்தமான ஆய்க்குடி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் வைத்து  கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறி நாய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அவைகள் தெரு நாய்களோடு கலந்திடா வண்ணம், பாதுகாத்துக் கொள்ளவும் இல்லையேல் அவர்கள் தெரு நாய்களுடன் சேர்த்து பிடித்துக் கொண்டு போய் கருத்தடை செய்து விடுவார்கள் என்ற தகவலை நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தெரிவித்துள்ளார்.

Similar News