சேலத்தில் 11 மாதங்களில் 164 பேர் மீது 'குண்டாஸ்'

Update: 2022-12-11 08:44 GMT

சேலத்தில், நடப்பு ஆண்டில், கடந்த 11 மாதங்களில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகரில், நடப்பு ஆண்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 164 பேர், இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க, மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறி, அராஜக செயல்களில் ஈடுபடுவோர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவர்கள் ஒரு ஆண்டுக்கு ஜாமினில் வெளியே வர முடியாது. கட்டாயம், ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

போலீசார் அடிக்கடி கைது நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை பிடித்தாலும் ஓரிரு மாதங்களிலேயே சிறைவாசத்தில் இருந்து வெளியே வந்துவிடும் சில குற்றவாளிகள், தொடர்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், மேலும் குற்றங்களை செய்து, பொது அமைதியை கெடுக்கின்றனர். இதனால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு, தனிநபர்களை பாதிப்படைய செய்கின்றனர். போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு, இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கின்றனர். 

இத்தகைய சமூக விரோத குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை என்பது, மீண்டும் அவர்களால் ஏற்படும் சமுதாய பாதிப்புகளை தடுக்க முடியும்; சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் விதமாகவும், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோதா, துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் இதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி சேலம் மாநகரில் கடந்த 11 மாதங்களில், 164 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 80 பேர் ரவுடிகள், மற்றவர்கள் கஞ்சா, மற்றும் குட்கா, லாட்டரி விற்பனை, பாலியல் வழக்கு, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில், மொத்தம் 164 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் கணவரை கொலை செய்த பெண் உட்பட 3 பெண்களும், ரவுடியை கடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர். அதிகபட்சமாக சூரமங்கலம், அன்னதானப்பட்டியில்  23 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். செவ்வாய்பேட்டையில் 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக மாநகரில் 129 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கடந்த 11 மாதங்களில், 164பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News