குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி துவங்கிய விவசாயிகள் தினமும் 20 மணி நேரம் மின்சாரம் கேட்கிறார்கள்.;

Update: 2024-05-16 14:45 GMT

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள்  குறுவை சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கியுள்ளனர். அவர்கள் தினமும் 20 மணி நேரம் மின்சாரம் கேட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். இந்த சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். குறுவை ,சம்பா சாகுபடி முடிந்ததும் அடுத்த ஆண்டு ஜனவரி 28இல் நீர் திறப்பு நிறுத்தப்படும்.

இந்த ஆண்டு தற்போது மேட்டூர் அணையில் 18 .1 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. குறுவை பாசனத்திற்கு நீர் திறக்க 60 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும். தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை பாசனத்திற்கு ஜூன் 12 ல்தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வறுத்தெடுக்கும் கோடை வெயில் வெப்பத்தால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் போதிய தண்ணீர் இருப்பு இல்லை.

எனவே குறுவை சாகுபடி தாமதப்படுத்த வேண்டும் என்று டெல்டா விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தினர். நிலத்தடி நீராதார வசதி கொண்ட விவசாயிகள் நீர் தேவை குறைந்த பயிர் வகைகள் மற்றும் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்திருந்தனர். ஆனால் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதி விவசாயிகள் முன்கூட்டியே குறுவை பருவ சாகுபடியை தொடங்கி விட்டனர். இது வேளாண் துறைக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது ‘தற்போது விஞ்ஞான தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளதால் மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் குறித்து அறிவியல் பூர்வமான தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன. அதேநேரம் விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவங்களை பயன்படுத்தி காலம் காலமாக சாகுபடி செய்வது பல நேரங்களில் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. அந்த வகையில் இப்போது குறுவை சாகுபடி தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள் கணித்தது போலவே இந்த மாதம் 19 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. எனவே குறுவை சாகுபடி விவசாயிகளை தடுக்க முடியவில்லை’என்றார்.

இதற்கு இடையே டெல்டா மாவட்டங்களில் முன்கூட்டியே விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்கி உள்ளதால் நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்துவதற்கு பகலில் 10 மணி நேரமும் இரவில் 10 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் .இதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் குறுவைப் பயிர்களை முழுமையாக பெற முடியும் என தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags:    

Similar News