தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை?

Update: 2021-06-15 23:09 GMT

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய காரணத்தினால் மேலும் சில தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பேருந்து சேவைகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மீதமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 27 மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்படாமல் மாவட்டங்களுக்குள்ளே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கும் வண்ணம் பேருந்து சேவை தொடங்கப்படலாம். பொது போக்குவரத்து குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் இ- பதிவு முறையில் ஜூன் 21 ஆம் தேதிக்கு பின்னர் தளர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும்.

Similar News