ராசிபுரம் அருகே டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலரை தாக்கி நகை பறிப்பு

ராசிபுரம் அருகே டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலரை தாக்கி நகை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-28 10:13 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் வசித்து வருபவர் சேகர். இவருடைய மனைவி ருக்குமணி (வயது 45). இவர் காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். தினசரி சேகர், தனது மனைவியை ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விட்டு விட்டு, மாலை திரும்பி அழைத்து வருவார். சம்பவத்தன்று மாலை சேகர் தனது மனைவி ருக்குமணியை, ஆபீசில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். இரவு 7.15 மணிக்கு, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், ருக்குமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அப்போது, ஸ்கூட்டரில் இருந்து சேகர், ருக்குமணி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி வந்த மர்ம நபர், ருக்குமணியை தாக்கி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் ருக்குமணி காயமடைந்தார். அவர் புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News