நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

Update: 2021-11-18 06:30 GMT

நாமக்கல் மாவட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தங்கள் பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு, பயிற்சிக் கூட்டம் நடத்துவதற்கான இடத்தை விரைவில் தேர்வு செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் கமிஷன் விதிமுறைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து அவற்றிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாட்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 4 வேட்புமனுக்களுக்கு மேல் தாக்கல் செய்யாமல் உறுதி செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பெயர் பட்டியலை தினந்தோறும் அலுவலக தகவல் பலகையிலும், இண்டர்நெட்டிலும் வெளியிட வேண்டும். மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கான பணிகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கோவேந்தன், பிஆர்ஓ சீனிவாசன், நகராட்சி கமிஷனர்கள், டவுன்பஞ்சாயத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News