அரசு விதிகளை மீறி இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-02 06:30 GMT

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு அனைத்து பள்ளி வாகனங்களையும் மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து தகுதிச்சான்று பெற வேண்டும் என்று தமிக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம், நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் பள்ளி வாகனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் தெற்கு, வடக்கு ஆர்டிஓ அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் 559 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில் 168 வாகனங்கள் தவிர மீதமுள்ள வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்படுகின்றன. அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் பார்வையிட்டு, ஆய்வு செய்து தகுதிச்சான்றிதழ் வழங்குவார்கள். ஏதேனும் குறைபாடு உள்ள வாகனங்கள் அவற்றை சரிசெய்ய கால அவகாசம் அளிக்கப்படும். தவறுகளை சரிசெய்து மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டுவந்து காண்பித்து தகுதிச்சான்று பெற வேண்டும். சான்று பெறாத வாகனங்களை இயக்கக் கூடாது. அப்படி சான்று பெறாமல், அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.

அனைத்து பஸ் டிரைவர்களுக்கும் தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. ஆர்டிஓக்கள் முருகேசன், முருகன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News