இந்தியாவின் ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கில்லை: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

இந்தியாவின் ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கில்லை என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியின் போது தெரிவித்தார்.

Update: 2022-03-14 09:30 GMT

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் 

நாமக்கல் மாவட்டம், கே.புதுப்பாளையத்தில், மத்திய இணை அமைச்சர் முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன. ஆஸ்பத்திரிகளைக் காட்டிலும், கோயில்கள் நமக்கு நிம்மதியையும், உற்சாகத்தையும் தருகின்றன. வீடும், நாடும் நல்வழியில் செயல்பட கோயில்கள் உதவுகிறது. இந்தியா முழுவதும் பாரத பிரதமர் மோடியின் நடவடிக்கையால் 180 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, அனைவரும் தைரியமாக நடமாடமுடிகிறது. தற்போது, பல்வேறு நாடுகளுக்கும், இந்திய அரசு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. பிரதமரின் தீவிர முயற்சியால், உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். புதுச்சேரிக்கு வந்த மாணவி ஒருவரை கேட்டபோது, மத்திய அரசு எடுத்த முயற்சியை பாராட்டினார்.

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. வரும், 27ம் தேதி, முதல் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. பெங்களூருக்கும் விமானை சேவை துவக்கப்பட உள்ளன. வரும் ஆண்டுகளில், புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். தற்போது, மாநிலத்தின் முதல் குடிமகளாக உள்ளேன். அந்த மகிழ்ச்சியே எனக்கு போதும். இந்தியாவின், முதல் குடிமகளாக ஆகும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, தமிழக கவர்னர் ரவியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என, வைகோ தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, கவர்னரை திரும்பப்பெறும் அதிகாரம் குடியரசுத் தலைவருககு மட்டுமே உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கவர்னர்களுமே சிறப்பாகத்தான் பணியாற்றி வருகின்றனர் என கூறினார்.

Tags:    

Similar News