தமிழக அரசு மீண்டும் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் என்று, மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-07-07 03:45 GMT

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான மணல் குவாரிகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் மணல் தட்டுப்பாடின்றி ஒரு யூனிட் ரூ.1300 வீதம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு லாரி வாடகையுடன் சேர்த்து ஒரு யூனிட் ரூ.3,500க்கு கிடைத்தது.

மணல் எடுத்துச் செல்லும் தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 55,000 லாரிகள் உள்ளன. மணல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கட்ருடுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுவந்தது. 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரசே வெப்சைட் மூலம் பதிவு முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் விநியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு தினசரி குறைந்தபட்சம் 60,000 யூனிட் மணல் தேவைப்படுகிறது.  ஆனால் 2017 ஜுன் மாதம் முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை 4 ஆண்டுகளில் பெயரளவில் 6 அரசு மணல் குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதன்மூலம் தினசரி சுமார் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டது.

மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் ஆறுகளில் அனுமதியின்றி திருட்டு மணல் எடுத்து ஒரு யூனிட் மணல் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்கின்றனர்.இதனால் தமிழக அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மணல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வீடு மற்றும் கட்டிடங்களை தொடர்ந்து கட்ட முடியாமல், கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மணல் கிடைக்காததால், தமிழகம் முழுவதும் இதற்கென வடிவமைக்கப்பட்ட சுமார் 55,000 மணல் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த லாரிகளில் வேறு லோடுகள் எடுத்துச் செல்ல முடியாது. நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய மாதக்கடன் தவணைத்தொகையை திருப்பி செலுத்த முடியாமல் பல மணல் லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்க, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகளை இயக்குவதற்கு மாநில சுற்றுச்சுழல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இருந்தும் இதுவரை இயக்கப்படாமல் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும்.

திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றிலும் மற்ற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும் தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இயக்கப்படாமல் உள்ள 55 ஆயிரம் மணல் லாரிகளை இயக்க முடியும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான தரமான மணல் குறைந்த விலையில் விநியோகம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News