நாமக்கல் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு: 4,534 மாணவர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில், 4,534 பேர் கலந்து கொண்டனர். 59 பேர் பங்கேற்கவில்லை.

Update: 2022-03-05 12:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. அதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம் தோறும் ரூ. 1,000 வீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கான தேர்வு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கல்வி மாவட்டத்தில், 12, திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 9 என, மொத்தம் 21 மையங்களில், இத்தேர்வு நடத்தப்பட்டது. அதில், நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 2,586 மாணவர்களில், 2,545 பேர் பங்கேற்றனர். 41 பேர் கலந்து கொள்ளவில்லை. திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், 2007 பேரில், 1,989 பேர் தேர்வு எழுதினர். 18 பேர் பங்கேற்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம், 4,593 பேரில், 4,534 பேர் மட்டுமே, தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர். 59 பேர் கலந்து கொள்ளவில்லை. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாதம் தோறும், கல்வி உதவித்தொகை, அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News