நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை துவக்கம்

நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை துவங்கியது.

Update: 2021-06-14 10:00 GMT

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் சேருவதற்காக மாணவிகள் கொரோனா கட்டுப்பாடுகளை அனுசரித்து கியூ வரிசையில்  நின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் தினசரி வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மற்ற வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஜூன் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவது, மாணவர் சேர்க்கை, நலத்திட்டங்கள், வகுப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நேற்று முதல், 11 ம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 11ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் அந்தந்த பள்ளிகளில் 10ம் படித்தவர்களுக்கு அதே பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பின் மற்ற பள்ளிகளில் இருந்து வருவோருக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. 11ம் வகுப்பு  மாணவர் சேர்க்கை முழுவதும் முடிந்த பிறகு மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News