நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டி: மோகனூர் அரசு மகளிர் பள்ளி சாம்பியன்

நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டியில் மோகனூர், அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர்.

Update: 2022-10-23 03:15 GMT

நாமக்கல் மாவட்ட தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  

நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான, தடகள விளையாட்டுப் போட்டிகள், ராசிபுரம் தாலுக்கா, மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இப்பள்ளி மாணவி கீர்த்தனா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், குதித்து எட்டித்தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றார்.

மாணவி தர்ஷினி, 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டும் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாணவி ஸ்ரீசிவநிதி 400 மீ., 800 மீ., ஓட்டம், நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

மாணவி விஜிதா 100 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம், குதித்து எட்டித்தாண்டும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி சந்தியா குண்டு எறியும் போட்டியில் முதலிடம், வட்டு எறியும் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

மாணவி கவிஷா 80 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகள் கவிஷா, ரித்திகா, இலக்கியா, காவியாஸ்ரீ ஆகியோர் 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.

மேலும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ. தொடர் ஓட்டத்தில், மாணவியர் ஸ்ரீசிவநிதி, விஜிதா, பூஜாஸ்ரீ, கோபிகா ஆகியோர் இரண்டாமிடமும், 1,600 மீ. தொடர் ஓட்டத்தில் மாணவியர் ஸ்ரீ சிவநிதி, கோபிகா, கலைச்செல்வி, பிரியா ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி சந்தியா, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி ஸ்ரீசிவநிதி, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி கீர்த்தனா ஆகியோர் பல போட்டிகளில் வெற்றிபெற்று, அதிக புள்ளிகளைப் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

அதேபோல், 76 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று இப்பள்ளி சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவியரை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News