13 ஆண்டுகளுக்கு பிறகு.... நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

Namakkal Anjaneyar Temple Kumbhabisekam 13 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2023-11-01 05:00 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஸ்வாமி பூரண அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Namakkal Anjaneyar Temple Kumbhabisekam 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. 

நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1996 ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா கடந்த அக். 30ம் தேதி மாலை, யாக சாலை பூஜைகளுடன் துவஙகியது. 31 ம் தேதி காலையும், மாலையும் யாக வேள்விகள் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இன்று நவ. 1ம் தேதி காலை யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, திருவாராதனம், சக்தி சங்கரஹணம், யாத்ரா தானம், கும்பபிரயாணம் ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மகா ஸம்ப்ரோக்ஷணம் எனும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பட்டாச்சார்யார்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் பட்டாச்சார்யார்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் தொடர்ந்து மஹா தீபாராதனை, சர்வ தரிசனம் நடைபெற்றது. 

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அலுவலர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் உமா, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம், சேலம் சரக டி ஐ ஜி மஹேஸ்வரி, நாமக்கல் எஸ். பி, ராஜேஸ்கண்ணன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, ஸ்ரீனிவாசன், செல்வசீராளன், இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, கோயில் உதவி கமிஷனர் இளையராஜா, துணை கமிஷனர் மேனகா, கண்காணிப்பாளர் அம்சா உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாமக்கல் முழுவதும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பஸ்கள் மற்றும் வாகனங்கள்  மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று, வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். போலீசார் தனி கட்டுப்பட்டு அறைஅமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் அருகில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News