தொடர்மழையால் நிரம்பிய ஏரிகள்; நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

Lake Water Levels -தொடர்ந்து பெய்துவரும் மழையால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-10-13 07:45 GMT

நாமக்கல் பகுதியில் பெய்த தொடர்மழையால், நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Lake Water Levels -தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 22 ஏரிகள் நிரம்பி உள்ளன. அதனால், நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல், அடிக்கடி கனமழை பெய்து வந்தது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பஞ்சம், இந்த ஆண்டு ஏற்படவில்லை. தென்மேற்குப் பருவமழை காலத்தில், பல இடங்களில் கனமழை பெய்ததால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில், பாதி அளவுக்கு மேல் நீர் நிரம்பியது. இந்தநிலையில் தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ஒரு சில மாவட்டங்களில், மிக கனமழையும், பல மாவட்டங்களில், கனமழையும் பெய்தது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. அதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் ஏரிகள், குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழை அளவு 766 மி.மீ., ஆனால் கடந்த, ஆகஸ்ட் மாதம் 2,088.80 மி.மீ., செப்டம்டர் மாதம் 932.42 மி.மீ. மழை என மொத்தம் 3,021.22 மி.மீ. மழை பெய்துள்ளது.

இந்நிலையில், இம்மாதத்தில், 3ம் தேதி 17.10, 9ம் தேதி 21.10, 10ம் தேதி 758, 11ம் தேதி 292 மி.மீ என, இதுவரை மொத்தம் 1,088.20 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சேந்தமங்கலம், கொல்லிமலைப் பகுதிகளில் அதிக மழை பெய்ததால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வழியில் உள்ள குளங்கள் நிரம்பி, மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான தூசூர் ஏரி கடந்த ஒரு வாரம் முன்பே நிரம்பி வழிந்துகொண்டுள்ளது.

மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக இதுவரை 22 ஏரிகள் நிரம்பி உள்ளன. நாமக்கல் கோட்டத்தில் உள்ள, செருக்கலை, இடும்பன் குளம், சேந்தமங்கலம் கோட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம், பெரியகுளம், துத்திக்குளம், பொன்னர்குளம், செட்டிக்குளம், எருமப்பட்டி கோட்டத்தில் உள்ள தூசூர், பாப்பன்குளம், பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, புதுக்குளம் ஏரிகள்.

அதேபோல், சேமூர், அக்கரைப்பட்டி, கோட்டப்பாளையம், ஏமப்பள்ளி, தேவனாம்பாளையம், பருத்திப்பள்ளி, பாலமேடு, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, அகரம் உள்ளிட்ட, மாவட்டத்தில் உள்ள மொத்தம் 22 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

தொடர் மழை காரணமாக, ஏரிகள் நிரம்பி வருவதால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News