கல்வி உதவித் தொகை தருவதாக மோசடி.. செல்போன் அழைப்புகளில் கவனம் தேவை…

செல்போனில் தொடர்பு கொண்டு கல்வி உதவித் தொகை தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் கும்பல் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-09 10:45 GMT

தொழில்நுட்பம் எவ்வளவு வருகிறதோ அதற்கு ஏற்றால்போல மோசடிகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. செல்போன் வந்த பிறகு விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது என்றே கூறலாம். பரிசு விழுந்துள்ளதாக் கூறி செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவது, வங்கி அலுவலர் போல நடித்து பேசி மோசடியில் ஈடுபடுவது என தொடர்ந்து பல்வேறு வகையான மோசடிகள் நீடித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகை தருவதாகக் கூறி மாணவ, மாணவிகளின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு மோசடியில் சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின்பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீஸார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாகவது:

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளின், பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை, மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, தாங்கள் தொடர்பு கொள்ளும் பெற்றோர்களின் மகன் அல்லது மகள், படிக்கும் அரசு அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளில் இருந்து பேசுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், அவர்களுடைய மகன் அல்லது மகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பணம் வந்துள்ளதாகவும், அதை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்காக, பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றும், கூகுள்-பே, கியு ஆர் கோடுகள் மற்றும் பின் நம்பர்களை ஸ்கேன் செய்து அனுப்பக் கோருகின்றனர்.

இதன் மூலம் பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை முறைகேடான பரிவர்த்தணை மூலம் எடுத்து விடுகின்றனர். இதனால் பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு சென்று விடுகிறது. இது சம்மந்தமாக பல்வேறு புகார்கள் சைபர் க்ரைம் பிரிவில் பெறப்பட்டு விசாரணையில் உள்ளது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தமிழ் மொழியிலேயே பேசி மோசடியில் ஈடுபட்டு வருவதும், மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகள் வெளி மாநிலங்களில் இருப்பதும் தெரிய வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள் மோசடிக்காரர்களிடம் இருப்பதாக தெரிகிறது.

எனவே, மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முன்னெச்சரிக்கையுடன் பாதுகாத்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மோசடிகாரர்கள் பேசும்போது கல்வி உதவித்தொகை பணம் ரூ. 14,500 என குறிப்பிட்டு சொல்வதவாக தெரிகிறது. பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தெரிய வருகிறது.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை மூலம், மாணவ மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் கல்வி உதவித் தொகை மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், உதவித் தொகை சம்மந்தமான தகவல்களை சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் மூலம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் Cyber Crime Help Line Number-1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார்களை பதிவு செய்யலாம் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News