ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி: கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ, ஹெச்சிஎல் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Update: 2022-08-23 00:45 GMT

நாமக்கல் கலெக்டர் ஷ்ரேயா சிங்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தாட்கோ மற்றும் ஹெச்சிஎல் நிறுவனம் இணைந்து பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.

இதற்கு தேவையான லேப்டாப்பை ஹெச்சிஎல் நிறுவனமே வழங்கும். பின்னர் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, உள்ளிட்ட நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். இதற்கு ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ்-பிளானி பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்பினை அந்நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிக்கலாம்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலைக்கழகம் மற்றும் உத்திரபிரதேசத்தில் உள்ள அமைட்டி பல்கலைக்கழகத்தில் அந்நிறுவன வேலைவாய்ப்புடன் 3 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்பு படிக்கலாம். இதற்கு பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். தாட்கோவின் பங்களிப்பாக ஹெச்சிஎல் நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும்.

இதற்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 லட்சம் கட்டணத்தை தாட்கோ கல்வி கடனாக வழங்கும். இத்திட்டம் தொடர்பான விபரங்கள், பதிவு செய்வதற்கு தாட்கோ.காம் என்ற தாட்கோ வெப்சைட்டி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News