வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

வளையப்பட்டி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-10-06 11:15 GMT

கோப்பு படம்

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்ல ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா, வாளையப்படியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மோகனூர் ஒன்றியம், எருமப்பட்டி ஒன்றியம், திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் ஒன்றியம், நாமக்கல் ஒன்றியம் ஆகிய அனைத்துப் பகுதிகளின் மையப்பகுதியாக வளையப்பட்டி அமைந்துள்ளது. சுற்றி உள்ள கிராமங்களில் ஆயிரக்காணக்கான விவசாயிகள், காய்கறிகள், சின்ன வெங்காயம், கீரை வகைகள், பூக்கள் ஆகியவற்றை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். இவைகளை நாமக்கல், கரூர், சேலம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

வளையப்பட்டி பஞ்சாயத்தில் போதுமான இடவசதி உள்ளதால் அப்பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், பயனுள்ளதாக அமையும். அது மட்டுமல்லாமல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்க வழிவகை ஏற்ப்படும். எனவே வளையப்பட்டியில் உடனடியாக உழவர் சந்தை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News