விதவைப் பெண்ணிடம் லஞ்சம்: விஏஓவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

விதவைப் பெண்ணிடம் ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-12-15 04:45 GMT

பைல் படம்

உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த விதவைப் பெண்ணிடம் ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ராசிபுரம் அருகே குட்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சுசீலா. இவரது கணவர் கந்தசாமி இறந்துவிட்டார். எனவே கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம், விவசாய தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்து அனுப்ப அப்போது குட்டலாம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த வேலப்பன் என்பவர் ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளார். அத்தொகையை வழங்க இயலாது என சுசீலா கூறியதால் ரூ.400 தரும்படி வற்புறுத்தியுள்ளார். இதனை வழங்க மனமில்லாத சுசீலா இதுதொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் அதே ஆண்டு ஜூலை 20ம் தேதி ரூ.400 லஞ்சமாக பெறுது கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று அதன் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News