நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.7,820.24 கோடி ஆண்டு கடன் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.7,820.24 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.

Update: 2021-11-13 04:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில், மாவட்டத்திற்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.7,820.24 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, 2022-2023-ம் ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்திற்கான வங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

நபார்டு வங்கியின் 2022-2023-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நாமக்கல் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ.7,820.24 கோடி வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7.46 சதவீதம் கூடுதலாகும். இதில் பயிர் கடனாக ரூ.2,773.77 கோடியும், விவசாய முதலீட்டு கடனாக ரூ.1,284.17 கோடியும், விவசாய கட்டமைப்பு கடனாக ரூ.92.53 கோடியும், விவசாய இதர கடன்களாக ரூ.179.26 கோடியும் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடாக ரூ.4,329.73 கோடியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் கடனாக ரூ.1,122.96 கோடியும், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடனாக ரூ.795.62 கோடியும், அடிப்படை கட்டுமான வசதி கடனாக ரூ.97.50 கோடியும், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்புக்குழுக்கான கடனாக ரூ.1,418.88 கோடியும் என மொத்தம் ரூ.7,820.24 கோடி அளவுக்கு மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும் என்று அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் மற்றும் வங்கி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News