சென்னை கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை முதன்மை கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2024-01-12 12:46 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. இவர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த கால கட்டத்தில் அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி கொண்டு வேலையும் தராமல் பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என மாறி மாறி சென்றது. ஆனால் தனது செல்வாக்கால் செந்தில் பாலாஜி அதனை சமாளித்து வந்தார். இந்த நிலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையிலும் செந்தில் பாலாஜி இடம் பிடித்தார். இது செந்தில் பாலாஜியின் கடந்த கால வரலாறு.

இந்த நிலையில் தான் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 16வது முறையாக அவருக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வரும் 22ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒருமாதம் வரை மருத்துவமனையில் இருந்த அவர் பின்னர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து ஜாமீன் கேட்டு அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரித்து வருவதால் ஜாமீன் குறித்த மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்கும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. தீபாவளிக்கு வந்துவிடுவார், புத்தாண்டுக்கு வந்துவிடுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டே வந்தது.

இறுதியாக பொங்கலுக்காவது அவர் வெளியேற வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று  காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக 2 மனுக்கள் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கைது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் விதிகளை மீறி போலி ஆவணங்களை தயாரித்தும், திருத்தியும் உள்ளதாக அமலாக்கத்துறை மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டிப்பு செய்யக்கூடாது, அனைத்து ஆவணங்களையும் முறையாக அமலாக்கத்துறை வழங்காமல் விசாரணையை தொடர்வது முறையற்றது. மேலும் உடல் நலம் கருதி அவரை  ஜாமீனில் விடுவிக்க வேண்டும்  எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவானது நீதிபதி அல்லி முன்னிலையில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்க துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர்.இதனை தொடர்ந்து ஜனவரி 8ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். எட்டாம் தேதி விசாரணை தொடங்கிய நேரத்தில் அமலாக்க துறை வழக்கறிஞர் வருவதற்கு காலதாதம் ஆனதால் நீதிபதி  கோபம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து மறு நாள் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை அழித்து விடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தீர்ப்பினை ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பினால் பொங்கல் பண்டிகை நேரத்தில் வெளியே வந்து விடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த அமைச்சர்  செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News