மதுரை அருகே 500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் கவலை

மதுரை வாடிப்பட்டி அருகே 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெற் பயிரில் களை வளர்ந்துள்ளதால், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் பாதிப்பு

Update: 2024-10-06 16:34 GMT

நெற்பயிர் இடையே விளைந்த களைகளை காண்பிக்கும் விவசாயிகள் 

வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் முதல் கட்ட குளம் வரை 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் முதல் போக சாகுபடிக்கான நெல் விவசாயம் செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களின் இடையே அதிக அளவில் களைகள் வளர்ந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நெற்பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறும் போது : கடந்த 1972 முதல் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் எனக்கு, இந்த ஆண்டு விவசாயத்தில் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக , நெல் பயிர்களின் நடுவே புதுவகையான களைகள் வளர்ந்து நெல் பயிரை நாசம் செய்து வருகிறது . இந்த களையானது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், புது வகையாக தெரிவதால் நெற் பயிர்களுக்கும் களைகளுக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில், நெற்பயிர் உடன் சேர்ந்து வளர்ந்துள்ளதால், தற்போது களைகள் அதிகமாகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஒரு ஏக்கர் நெற்பயிரில் களைகளை எடுப்பதற்கு பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக செலவு வருகிறது. ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் செலவு செய்திருக்கும் சூழலில் தற்போது கூடுதலாக பத்தாயிரம் செலவு ஏற்படுவதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பகுதியில், உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 500 ஏக்கர் விவசாய நிலம் இந்த களைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கும் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலையில் உள்ளனர்.

வாடிப்பட்டி வேளாண்துறை அதிகாரிகள் நெற்பயிரின் ஊடே வளர்ந்துள்ள களைகளை பார்வையிட்டு அகற்றி நெற்பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கஅரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News