வழக்கறிஞர் அங்கி அணிய சொல்வதா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

வழக்கறிஞர் அங்கி விவகாரத்தில் தேசிய கம்பெனி சட்ட வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-02-08 07:19 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டும் என கடந்த 2017 நவம்பர் 14 ஆம் தேதி, தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பொது நல வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய கம்பெனி சட்ட விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எந்தவித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டும் என்று உத்தரவிட முடியாது என இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.

மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அங்கி அணிவது கட்டாயமில்லை என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர். மேலும், இதுபோல் விதிகள் வகுக்க உயர் நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது எனக் கூறி, கடந்த 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

இதற்கிடையே, தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை பொறுத்தவரை இந்திய பார் கவுன்சில் விதிகள் பொருந்தும் என தேசிய கம்பெனி சட்ட வாரியம் கடந்த மாதம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவையும் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

Similar News