நியாய விலை கடை பணி ரூ 5 லட்சத்திற்கு விற்பனை: இளைஞர் உள்ளிருப்பு போராட்டம்

குமரியில் நியாயவிலை கடை பணியாளர் ஆணை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக இளைஞர் குற்றம் சாட்டினார்.

Update: 2021-09-22 14:30 GMT

மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகளின் முறைகேட்டை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூட்டேற்றி பகுதியை சேர்ந்த இளைஞர் ரமேஷ்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் பணிபுரிய பணி ஆணை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பெரும் தொகையை கொடுப்பவர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு  இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக,  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகளின் முறைகேட்டை கண்டித்து, பூட்டேற்றி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,  நியாய விலை கடைகளில் பணியாளர் நியமனத்துக்கு  5 லட்சத்திற்கு விற்கப்படுவதாகவும், நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற  தன்னால் பணம் கொடுக்க முடியாததால், தனக்கு கிடைக்க வேண்டிய பணியை வேறு நபருக்கு அதிகாரிகள் விற்பனை செய்து விட்டனர்.மேலும், 2018 ஆம் ஆண்டு முதலே பணி ஆணை வழங்குவதாக கூறி ஏமாற்றும் அதிகாரிகள் குறித்து முதலமைச்சர் தனி பிரிவிற்கு மனு அளித்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தனக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டதாவும் இளைஞர் ரமேஷ் தெரிவித்தார். இந்தப் போராட்டம் காரணமாக  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News