தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய பள்ளி ஆசிரியைகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குளோபல் சிபிஎஸ்சி பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-01-21 13:30 GMT

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கும் பள்ளி ஆசிரியைகள்

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்று சாலை விதிகளை கடைபிடிக்க கோரி முழக்கங்கள் எழுப்பியும், சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நன்றி தெரிவித்த ஆசிரியைகளின் செயலை பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர். 

தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு வரும் கடந்த 11ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குளோபல் சிபிஎஸ்சி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த பேரணி மற்றும் முதலுதவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி முதல்வர் காயத்ரி அன்பரசி தலைமையில் நடைபெற்றது . இதில் பள்ளியின் தாளாளர் திருவேங்கடம், ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான டாக்டர் நிஷாபிரியம் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் நிஷாபிரியம், மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகளை செயல் முறையில் எடுத்துரைத்தார். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட், சீட் பெல்ட் அணிதல், வாகன விபத்தில் சிக்கியவருக்கு எவ்வாறு முதலுதவி செய்தல் குறித்து மாணவர்களை வைத்து செயல்முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் தாளாளர் திருவேங்கடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணி காஞ்சிபுரம் வந்தவாசி சாலை வழியாக அருகில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று ஹெல்மெட் அணிதல் , சாலை பாதுகாப்பு விதிகளை மதித்தல் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என முழக்கங்கள் விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தும், ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு ஹெல்மெட் அணிய ஆசிரியைகள், சிறு வயது பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு அளித்த செயல் அப்பகுதியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து முதல்வர், மருத்துவர் தெரிவிக்கையில் இளமையில் கல்  எனும்  பழமொழிக்கு ஏற்ப இளமை வயதிலேயே சாலை விதிகள், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் அறிந்து கொண்டால் பெரிதும் உதவும் என்ற நோக்கிலே இதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் காமாட்சி, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியரியைகள் , மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News