கொட்டும் மழையில் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது

கொட்டும் மழையில் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Update: 2024-10-09 13:45 GMT

அனுமதி இன்றி போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

ஒரு மாத காலமாக போராடிவரும் சாம்சங் தொழிலாளர்கள் இன்று கொட்டும் மழையிலும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் அவர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் மயங்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை பதிவிட்டு கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை போராட்ட திடலில் இருந்த பந்தல்கள் அகற்றப்பட்டு அங்கு இருந்த ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் நீதிபதி அவர்களுக்கு பிணை வழங்கி விடுதலை அளித்தார்.


நேற்று போராட்டத்திற்கு வந்த தொழிற்சாலை ஊழியர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அங்கு காவல்துறையிடம் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்களை பணி செய்ய விடவில்லை எனக் கூறிய காவல்துறை40 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. அதில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று போராட்ட திடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்கள் வருகை புரிந்து ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் ஏ டி எஸ் பி சுரேஷ்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வழக்கம் போல் போராட்ட திடலுக்கு வரும் ஊழியர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சித்த நிலையில் அவர்கள் அனைவரும் போராட்ட திடலில் பேரணியாக ஒன்று கூடினர்.

அவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையிடம் கடும் வாக்குவாதம் நிலவியது.

அப்போது திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த மழை சுமார் 40 நிமிடம் பெய்த நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சற்றும் விலகாது நனைந்த வாரே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஒரு வழியாக காவல்துறை தொழிற்சங்க தலைவர்களை கைது செய்து தொழிலாளர்களையும் கைது செய்ய முயன்று பெரும் பரபரப்பை அப்பகுதியில் நிலவியது.

இறுதியாக அனைத்து தொழிலாளர்களையும் கைது செய்து காவல்துறை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags:    

Similar News