செய்யாற்று தற்காலிக பாலத்தில் பேருந்துகள் செல்ல அனுமதி.. லாரிகள் செல்ல தடை..

செய்யாற்று தற்காலிக பாலத்தில் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், லாரிகள் செல்வதற்கான தடை தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-19 07:45 GMT

செய்யாற்று தற்காலிக பாலத்தில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

கடந்த 17 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 305 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 309 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 191 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 398 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 475 மில்லி மீட்டர் என மொத்தம் 2113 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆம்டு பெய்த கனமழை காரணமாக மாகரல் - வெங்கச்சேரி இடையே அமைந்துள்ள மேம்பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன்பின் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் ஆண்டுதோறும் பருவமழை மற்றும் புயலின் போது ஏற்படும் கன மழையினால் சேதம் அடைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

தற்போது பெய்த கனமழையால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொது போக்குவரத்து கடந்த ஆறு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி , கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இருசக்கர வாகனங்கள் மட்டும் முதல் இரு நாட்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் நீர்வரத்து அதிகரிக்கிறது காணப்பட்டதால் இருசக்கர வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பார்வையிட்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்யாறு மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.

அதன் பேரில் சேதம் அடைந்த பகுதியில் மணல் மூட்டை மற்றும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு தற்காலிக மின்விளக்குகள் அமைக்கபட்டு இன்று காலை முதல் அரசு மற்றும் தனியார் பயணிகள் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் தொழிற்சாலை பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியை சுற்றியுள்ள கல்குவாரி தொழிற்சாலை கனரக லாரிகள் தற்காலிக மேம்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நீர் வரத்து குறைந்து வந்ததால் மேம்பாலம் கட்டும் பணிகளை தொழிலாளர்கள் தற்போது துவக்கி உள்ளனர்.

பயணிகள் பேருந்துகள் துவக்கப்பட்டதால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லும் முதியோர்கள் என பல தரப்பட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News