காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு

கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் சான்றிதழ் வழங்காததால் புதிய கடன் பெற இயலவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

Update: 2022-03-08 06:30 GMT

விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்கக்கோரி காமராஜபுரம், தம்மனூர் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜபுரம் மற்றும் தம்மனூர் கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் இங்குள்ள பெரிய ஏரியை நம்பிதான் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் விவசாய கடன் பெற வாலாஜாபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை நாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 2020க்கு முன் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிலருக்கு மட்டுமே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது.

இக்கிராமத்தை சேர்ந்த பலருக்கு இது வரை கடன் தள்ளுபடி சான்று வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் புதிய விவசாய கடன் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே விவசாயிகள் கூட்டுறவு வங்கியை நாடும்போது முறையான பதில் கூறாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். தற்போது தனிநபர் மற்றும் நகை கடன் பெற்று விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதால் விரைவாக விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கக்கோரியும், மேற்படி நபருக்கு உடனடியாக புதிய விவசாயக்கடன் வழங்க உத்தரவிடவேண்டும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Tags:    

Similar News